×

மானாமதுரையில் மாயமான குப்பைத்தொட்டிகள் தெருக்களில் குவியும் குப்பைகளால் சுகாதாரக்கேடு

மானாமதுரை, மார்ச் 10:  மானாமதுரை நகரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகள் பழுது அடைந்து போனதால் அகற்றப்பட்டது. அதன்பின் புதிய குப்பைகள் தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பைகளை தெருவில் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மானாமதுரை பேரூராட்சியில் அதிக மக்கள் வசிக்கின்றனர். பெருகி வரும் குடியிருப்புகளால் நகராட்சி அந்தஸ்திற்கு உயர்ந்து வருகிறது. தினமும் 12 டன் குப்பைகள் சேகரமாகிறது. 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றிவரும் நிலையில் முக்கிய தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் பழுது அடைந்து அகற்றப்பட்டது. அந்த இடங்களில் புதிய குப்பைதொட்டிகள் அமைக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் குப்பைகளை தெருவில் வீசிசெல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தேமுதிக நகர செயலாளர் பால்நல்லதுரை கூறுகையில், மானாமதுரை நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதற்கு வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகளை சமீப நாட்களாக காணவில்லை. குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், சிஎஸ்ஐ பள்ளி, காவலர் குடியிருப்பு, கொடிக்கால் தெரு, மரக்கடை வீதி, உட்பட பல இடங்களில் குப்பைதொட்டிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் தெருக்கள், ரோடுகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். அதனை ஆடு, மாடுகள் மற்றும் நாய்கள் கிளறி போட்டு விடுகிறது. இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது. எனவே மானாமதுரை மக்களின் பொதுசுகாதாரத்தை கவனத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைதொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : streets ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...