×

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை சீனாவில் இருந்து வந்தவர்கள் தீவிர கண்காணிப்பு

சிவகங்கை, மார்ச் 10: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கலெக்டர் தெரிவித்தார்.  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்கள் இல்லை. சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளாமானோர் சீனாவில் ஓட்டல் தொழில் செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மூலம் தினமும் வீட்டில் சென்று கண்காணித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கழிப்பறை வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தனி அறையில் பாதுகாப்புடன் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் குறித்த பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் சிகிச்சைக்கு வரும்போது தனிஅறையில் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி அருந்தி வந்தாலே நோயின் தாக்கம் குறையும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாமணி, மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், குடும்ப நலப்பணிகள் துணை இயக்குநர் யோகவதி, காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் ராஜசேகர், உலக சுகாதார நிறுவன நிலையான மருத்துவக் கண்காணிப்புக் குழு அலுவலர் சந்தோஷ்ராஜகோபால், மருத்துவக் குழு செயலாளர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாமிசங்களால் நோய் பரவுமா? கலெக்டர் மேலும் கூறுகையில், கோழிகள் மற்றும் விலங்கினங்களால் கொரோனா வைரஸ் பரவாது. பொதுமக்கள் பீதி  அடையத் தேவையில்லை. மாமிசங்களை நன்கு வேகவைத்து சாப்பிடவும். இருமும்  போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள  வேண்டும் மற்றும் தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு  தேய்த்து கழுவ வேண்டும் என்றார்.

Tags : district ,Sivaganga ,
× RELATED சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று...