×

திறக்கப்படாத சத்துணவு மையம் மாணவர்களின் வருகை பாதிப்பு

சிவகங்கை, மார்ச் 10:  சிவகங்கை அருகே பழமலை நகர் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள சத்துணவு மையம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் அருகில் உள்ள பள்ளியில் இருந்து குறைந்த அளவே உணவு வழங்கப்படுவதால் மாணவர்களின் பள்ளி வருகை பாதிப்படைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான கிராப்புற பள்ளிகள் உள்ளன. கிராமங்களில் உள்ளவர்கள் அதிகாலையிலேயே வேலைகளுக்கு சென்று விடுவதால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மதிய வேளையில் பள்ளியில் வழங்கும் உணவையே சாப்பிடுகின்றனர். சிவகங்கை அருகே பழமலை நகரில் நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் நோக்கில் தொண்டு நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் 2010ல் அப்பள்ளியை அரசு ஏற்று நடத்தி வருகிறது. பள்ளிகளுக்கு செல்லாத இக்குடியிருப்பு பிள்ளைகள் இங்கு பள்ளி தொடங்கியதும் சிறிது, சிறிதாக வரத்தொடங்கினர். தற்போது சுமார் 90க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்கு நரிக்குறவர் குடியிருப்பை சார்ந்த பிள்ளைகளே கூடுதலாக படிக்கின்றனர். இவர்களுடைய பெற்றோர்கள் பல்வேறு ஊர்களுக்கு வியாபார நிமித்தம் சென்று விடுவதால் மதியம் பள்ளியில் வழங்கும் உணவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஆனால் இப்பள்ளியில் சத்துணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை. அருகே உள்ள வேறு பள்ளியில் இருந்து சமைத்து எடுத்து வந்து இங்குள்ள மாணவர்களுக்கு வழங்குகின்றனர். காலை நேரத்தில் கணக்கெடுத்து சென்று விட்டு மதியம் உணவை கொண்டு வருகின்றனர். சில நேரத்தில் தாமதமாக வரும் மாணவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. கடந்த 2012ம் ஆண்டு இங்கு சத்துணவு சமையலறை கட்டிடம் மற்றும் சாப்பிடும் அறை கட்டப்பட்டது. அக்கட்டிடங்கள் இதுவரை திறக்கப்படாமல், சத்துணவு மையம் செயல்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களின் வருகை பாதிப்படைந்து வருகிறது. இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி கூறியதாவது:இங்கு பள்ளி திறக்கப்பட்ட பிறகு ஏராளமான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. இப்பள்ளியில் சத்துணவு வழங்குவது முக்கியமானதாகும். ஆனால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளனர். வெறும் பத்து மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளில் சத்துணவு மையம் உள்ளது. ஆனால் இங்கு 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள நிலையில் அலுவலர்கள் இதுவரை அக்கறை செலுத்தவில்லை. முறைப்படி சத்துணவு வழங்க தொடங்கினால் இங்குள்ள பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தற்போதுள்ள மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வரச்செய்யவும் முடியும் என்றார்.

Tags :
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்