×

கிடப்பில் கருவேல மர ஒழிப்பு திட்டம் அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

தொண்டி, மார்ச் 10: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள், கண்மாய்கள், தரிசு நிலங்கள் என கிராமங்களை சுற்றியுள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம் காணப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுக்கு சொந்தமான இடங்கள், கண்மாய்களில் உள்ள இம்மரங்களை அகற்றும் பணியும் நடந்தது. ஆனால் மாவட்டம் முழுவதும் மிகக்குறைவான அளவிலேயே இம்மரங்களை அகற்றும் பணி நடந்தது.அனைத்து மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரம் அகற்றும் பணி நடந்ததால், இந்த விறகுகளுக்கு முன்பு போல் விலை கிடைக்கவில்லை. மரங்களை அகற்ற போதிய வேலையாட்களும் இல்லை. இதனால் டெண்டர் எடுத்தவர்கள் மரங்களை வெட்டாமல் இருந்தனர். தனியாரும் அவர்களது இடங்களில் மரங்களை அகற்றவில்லை.அரசு இடங்களில் உள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இம்மரங்களை அகற்ற நடவடிக்கை இல்லாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இம்மரங்களை அகற்றும் போது மரத்தில் உள்ள அதிகப்படியான காய்கள் நிலத்தில் கொட்டின. மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் வேறு செடிகள் எதுவும் நடாமல் காலியாக விடப்பட்டதால் காய்கள் காய்ந்தவுடன் நிலத்தில் விதைகளாக பரவி தற்போது மீண்டும் அதிகப்படியான சீமைக்கருவேல மரங்கள் அந்த இடங்களில் முளைத்துள்ளது.இதுபற்றி விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது, ‘சீமைக்கருவேல மரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயே இம்மரங்களை அகற்ற தடையாக இருந்தது. சீமைக்கருவேல மரங்களை அகற்ற டெண்டர் விடாமல் பல லட்சக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் உள்ளன. அவற்றிலும் மரங்கள் அகற்றப்பட வில்லை. டெண்டர் விடாத இடங்களில் மரத்தை அகற்றினால் அந்த மரங்களை வருவாய்த் துறையினர் விற்று முறைகேடு செய்கின்றனர் என்ற புகாரால் இந்த இடங்களில் உள்ள மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன. அகற்றப்பட்ட இடங்களில் வேறு செடிகள் நடாததால் மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து இப்பணியை கேள்விக்குறியாக்கி உள்ளது. வருவாயை எதிர்பார்க்காமல், முறைகேடுகள் செய்யாமல், பிற பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இம்மரங்களை அகற்றுவதை முழுநேரப் பணியாக பல்வேறு துறைகள் ஈடுபட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : district administration ,
× RELATED தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள்...