×

மழைநீர் கால்வாய் கட்டிடங்களாக மாறும் அவலம் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்


காரைக்குடி, மார்ச் 10: காரைக்குடி என்ஜிஓ காலனி பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கால்வாய்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதால் மழைநீர் கண்மாய்க்கு செல்லமுடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
காரைக்குடி என்ஜிஓ காலனி தேசிய நெடுஞ்சாலையின் (திருச்சி பைபாஸ் சாலை) இரு பகுதிகளிலும் பாண்டியன் நகர், வீட்டு வசதிவாரியம், வி.ஏ.ஓ காலனி, போக்குவரத்து நகர், என்.ஜி.ஓ காலனி, கம்பன் நகர் என பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் பிளாட்களுக்காக பிரித்த இடத்தில் இருந்து சாலைக்கு சுமார் 100 முதல் 120 மீட்டர் வரை காலி இடம் இருந்தது. சாலையின் ஓரத்தில் மழைநீர் செல்ல வசதியாக கல்வாய் அமைக்கப்பட்டு, சங்குசமுத்திர கண்மாய்க்கு செல்லும் வகையில் உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியில் குடியிருப்புகளும், கடைகளும் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில கடைகள் மற்றும் குடியிருப்புகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக முன்பக்க பகுதியில் உள்ள கால்வாய்யை ஆக்கிரமித்து கட்டி உள்ளனர். தவிர ஒரு சில இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்றார்போல் மழைநீர் கால்வாயை திருத்தி கட்டி உள்ளனர். சாலையின் ஓரங்களில் உள்ள இடங்கள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடந்து செல்ல சாலையையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையை இணைக்ககூடிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இப்பகுதியில் அதிகளவில் வாகனங்கள் செல்லும் நிலையில் தினமும் விபத்து நடப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. கால்வாய்களின் மேல் பகுதிகளை தனிநபர்கள் தங்கள் இடங்களுக்கு செல்லும் வகையில் பாலம் போல் அமைத்து அதில் கடைகளை கட்டி வருகின்றனர்.

ஒருசிலர் தங்கள் கடைகளை முன்புற பகுதிகள் முழுவதையும் கால்வாய்களிலேயே கட்டி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலை துறைக்கு அப்பகுதி மக்கள் புகார் அனுப்பியும் பயனற்ற நிலையே உள்ளது. கால்வாய் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிலர் தங்களுக்கு பட்டா இடம் என கூறி வருகின்றனர். இந்த கால்வாய் பாதையை முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு வீட்டு மனை வாங்கியவர்கள் கடைகளை கட்டி சாலையின் ஓரங்களில் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டு நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளனர். தவிர தங்கள் இஷ்டம் போல மழைநீர் வரத்து வாய்க்காலை திருத்தி அமைத்துள்ளனர். இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, சங்கராபுரம் ஊராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாதசாரிகள் சாலையை விட்டு இறங்கி நடக்க இடம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இப்பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்பாலும், தூர்வாரப்படாததாலும் மழைநீர் வீணாகி வருகிறது. எனவே மழைநீர் வரத்துகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சங்குசமுத்திர கண்மாயில் தண்ணீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : district administration ,rainwater canal buildings ,
× RELATED புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7...