×

மதுரையில் தினசரி குறையும் கோழிக்கறி விற்பனை விற்பனைக் கடைகள் மூடல்: வியாபாரிகள் தவிப்பு

மதுரை, மார்ச் 10: மதுரையில் நாளுக்கு நாள் கோழிக்கறி விலை சரிந்து வரும் நிலையில், பல இடங்களில் விற்பனை கடைகள் மூடப்பட்டு, வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.மதுரை மாவட்டத்திற்கு பல்லடம், ஒட்டன்சத்திரம், தாராபுரம், நத்தம், திருவில்லிபுத்தூர், நெற்கட்டான் செவல், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கறிக்கோழி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினசரி மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்து 500 கிலோ கோழிக்கறி விற்பனை நடக்கிறது. ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இந்த விற்பனை 2 மடங்கு எகிறி நிற்கும். இந்நிலையில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது கோழிக்கறி விற்பனை மிகவும் சரிந்துள்ளது. நேற்று மொத்த கடையில் கறிக்கோழி ரூ.44க்கும், சில்லறைக் கடைகளில் கறிக்கோழி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது. இந்த திடீர் விற்பனைச் சரிவால் மாவட்டத்தில் பல்வேறு கோழிக்கறிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கோழி விற்பனைத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை கறிக்கோழி விற்பனை சங்க நிர்வாகி கணேசன் கூறும்போது, ‘‘கறிக்கோழி விலை 4ல் ஒரு பங்காக திடீரென குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட பகுதி கறிக்கோழிகள் தமிழகத்திற்கே விற்பனைக்கு வருகின்றன. ஏற்கனவே இங்கு கொரோனா பீதி உள்ளிட்டவைகளாலும் கறிக்கோழி விற்பனை மிகவும் சரிந்துள்ள நிலையில், வரத்து அதிகரிப்பும் மேலும் விலையை குறைத்து விடுகிறது. பொதுவாக 40 நாட்களில் கோழி உற்பத்தி முடிந்து விடும். அவ்வகையில் தற்போது விற்பனை சரிவால், இந்த கோழியின் விலையும் சரிவு கண்டுள்ளது. அதேநேரம் வரும் காலத்தில் உற்பத்தி இன்றி கறிக்கோழி பற்றாக்குறையில் விலை இரட்டிப்பாகும். கிலோ ரூ.300 வரையிலும் கூட இந்த கறிக்கோழி விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

Tags : Closing ,chicken shops ,merchants ,Madurai ,closure ,
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...