×

அலங்காநல்லூர் பேரூராட்சியில் வார்டு மறுவரையறை கோரிய மனு தள்ளுபடி

மதுரை, மார்ச் 10: அலங்காநல்லூர் பேரூராட்சியில் வார்டு மறுவரையறை கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.  அலங்காநல்லூர் கல்லணையைச் சேர்ந்த செல்வராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் பேரூராட்சியில் நடந்த வார்டு வரையறை  பணியில், ஒரு தரப்பினருக்கு சாதகமாகவும், மற்றொரு தரப்பினருக்கும் பாதகமாகவும் செய்துள்ளனர். ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு விதி, மறுசுழற்சி விதி உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றவில்லை. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி அலங்காநல்லூர் பேரூராட்சியில் 12 ஆயிரத்து 331 பேர் இருந்தனர். இதில், 2025 பேர் ஆதிதிராவிட பிரிவைச் ேசர்ந்தவர்கள். இதனடிப்படையில், 3 வார்டுகளை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் 2 வார்டுகள் மட்டுமே ஒதுக்கியுள்ளனர். தற்போது ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட 9 மற்றும் 10வது வார்டில் மட்டுமே சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது. 2வது வார்டில் பல ஆண்டுகளாக சுழற்சி முறை பின்பற்றப் படவில்லை. 4, 5 மற்றும் 6வது வார்டுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள வாக்காளர்களை மட்டும் வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். ஒரு குடும்பத்தில் உள்ள வாக்காளர்களை வெவ்வேறு வார்டுகளில் சேர்த்துள்ளனர். இதேபோல, பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எனவே, அலங்காநல்லூர் பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளின் வாக்காளர்களின் கருத்துக்களையும் கேட்டு, மாநில தேர்தல் ஆணைய விதிகளை முறையாக பின்பற்றி மறுபடியும் முறையாக வார்டு மறுவரையறை செய்து புதிதாக வாக்காளர் பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் தேர்தல் ஆணையத்துடன் சம்பந்தப்பட்டது. அதில், இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.  

Tags : Ward ,Alanganallur ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி