×

கருவாடு விற்று பிழைப்பு நடத்தும் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் குஜிலியம்பாறை மக்கள் வியப்பு

குஜிலியம்பாறை, மார்ச். 10: குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர்புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (47). ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கடந்த 2006- 2011ல் கூம்பூர் ஒன்றிய கவுன்சிலராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெற்றி பெற்றார். அப்போது குஜிலியம்பாறை ஒன்றிய குழு தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அப்பதவிக்கு ஆறுமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை குஜிலியம்பாறை ஒன்றிய குழு தலைவர் பதவியில் ஆறுமுகம் இருந்தார். பின்னர் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் 2011- 2016ல் மீண்டும் கூம்பூர் ஒன்றிய கவுன்சிலர் ஆனார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாததால் தற்போது பொறுப்பு ஏதும் இல்லை. இந்நிலையில் வேலைவாய்ப்பும் ஏதும் இல்லாததால், குடும்பம் நடத்துவதற்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அப்போது சந்தைகள்தோறும் சென்று கருவாடு விற்று பிழைப்பு நடத்துவது என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து மொத்த விலைக்கு கருவாடு வாங்கி, அதனை சந்தைகள்தோறும் கொண்டு சென்று சில்லறை வியாபாரம் செய்கிறார். கடந்த 5 ஆண்டு காலம் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்தும், 5 ஆண்டு காலம் ஒன்றிய கவுன்சிலர் பதவி என கடந்த 10 ஆண்டு காலம் உள்ளாட்சி அமைப்பில் பதவி வகித்தும் எந்த ஒரு கவுரம் பார்க்காமல் ஸ்பீக்கரில் ‘வாங்கம்மா... வாங்கய்யா... வந்து கருவாடு வாங்கி போங்க என்று மக்களை அழைத்தபடி சந்தையில் வியாபாரம் செய்கிறார். இதனை பொதுமக்கள் மக்கள் வியந்தபடி வாங்கி செல்கின்றனர். உள்ளாட்சி அமைப்பில் ஒரு முறை கவுன்சிலர் பதவி வகிப்பவர்கள், பல லட்சம் மதிப்பீல் சொத்துக்கள் சேர்த்து வரும் நிலையில், கடந்த 5 ஆண்டு காலம் ஒன்றிய குழு தலைவராக இருந்தும் தற்போது கருவாடு விற்கும் ஆறுமுகத்தை ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து ஆறுமுகம் கூறுகையில், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 5 ஆண்டுகள் ஒன்றிய குழு தலைவராக இருந்தேன். இதற்கென சம்பளம் கிடையாது. கவுன்சிலர் கூட்டம் நடக்கும்போது அமர்வு படியாக ரூ.600 தருவர். எங்கள் கட்சியில் இருந்து மாதம் ரூ.2000 கிடைத்தது. அடுத்த 5 ஆண்டுகள் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றினேன். நான் வகித்த பதவி காலத்தில் எவ்வித அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை. நூறு சதவீதம் நியாயமாக நடந்தேன். இப்போது குடும்பத்தை பராமரிக்க கருவாடு வியாபாரம் செய்கிறேன். இந்த தொழில் செய்வதற்காக கடன் பெற்று ரூ.55 ஆயிரம் மதிப்பில் பெட்ரோல் சேன்ட்ரோ கார் ஒன்று வாங்கி ஊர் ஊராய், சந்தை, சந்தையாக சென்று கருவாடு விற்று வருகிறேன். இதில் நான் எவ்வித கவுரமும் பார்ப்பதில்லை. நான் ஒன்றிய தலைவர் பதவியில் இருந்த போது எப்படி நூறு சதவீதம் நியாயமாக இருந்தேனோ, அதுபோலத்தான் நான் தற்போது செய்து வரும் தொழிலிலும் மக்களை ஏமாற்றாமல் நியாயமாக இருந்து வருகிறேன்’ என்றார்.இவருக்கு சின்னமணி (40) என்ற மனைவியும், தங்கமணி (9) என்ற மகளும் உள்ளனர். இவர் கூம்பூர் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

Tags : union group ,head ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்