×

திருப்போரூர் - மானாம்பதி இடையே பஸ் கட்டணம் திடீர் உயர்வு: பொதுமக்கள் பாதிப்பு

திருப்போரூர், மார்ச் 10: திருப்போரூர் - மானாம்பதி இடையே பஸ் கட்டணம் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அடையாறில் இருந்து மானாம்பதி வரை மாநகர பஸ் (தஎ 522) இயக்கப்படுகிறது. மானாம்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திருப்போரூர், கேளம்பாக்கம் வழியாக சென்னை செல்வதற்கு இந்த பஸ்சை பயன்படுத்துகின்றனர். கிராம மக்கள், தங்களது வேளாண் விலை பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து செல்லவும் இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுவரை சாதாரண பஸ்சாக இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டீலக்ஸ் பஸ்சாக தரம் உயர்த்தப்பட்டு இயக்கப்படுகிறது. சாதாரண பஸ்சாக இருந்தபோது திருப்போரூரில் இருந்து மானாம்பதி செல்ல ₹10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. டீலக்ஸ் பஸ்சாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது மானாம்பதியில் இருந்து 10 கிமீ தூரம் உள்ள திருப்போரூர் வரை பயணம் செய்ய ₹22 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் தினமும் ₹200 வருமானத்தை நம்பி வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலைக்கு செல்வோரும், கூலி வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, கிராம மக்களின் திடீர் சுமையை கருத்தில் கொண்டு அடையாறில் இருந்து மானாம்பதி வரை இயக்கப்படும் மாநகர பஸ்சை சாதாரண பஸ்சாக மாற்றி பழைய கட்டணத்தை வசூலித்து இயக்க வேண்டும் என மானாம்பதி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Manampathi ,Tiruppore ,
× RELATED திருப்போரூர் அருகே பைக்குகள் மீது வேன் மோதி 7 பேர் காயம்