×

பூசிவாக்கம் - புத்தகரம் சாலையில் குறுகிய வளைவுகளால் தொடரும் விபத்துகள்: வாகன ஓட்டிகள் அவதி

வாலாஜாபாத், மார்ச் 10: பூசிவாக்கம் - புத்தகரம் வரையிலான சாலையில் உள்ள குறுகிய வளைவுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் - புத்தகரம் வரை செல்லும் சாலையில், கிதிரிப்பேட்டை, நெய்குப்பம், மருதம், கரூர், ஊத்துக்காடு உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தனியார் மற்றும் நிறுவன ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் சென்று வருகின்றனர். இதுமட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பஸ் இந்த வழியாக இயக்கப்படுகின்றன.

இந்த சாலையில் ஆங்காங்கே குறுகிய வளைவுகள் அதிகளவில் உள்ளன. இரவு நேரங்களில் இச்சாலையில் பைக்கில் செல்பவர்கள், குறுகிய வளைவுகளில் நிலைதடுமாறி, பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். ஆட்ேடா, கார், ேவன் போன்ற வாகனங்கள் பள்ளத்தில் கவிந்துள்ளன. குறிப்பாக, இந்த சாலையில் புதிதாக வருபவர்கள் நிலை பரிதாபமானது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த கிராம சாலையில் தினமும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயணிக்கின்றனர். தினமும் இவ்வழியாக செல்லும் மக்களுக்கு, எந்த பகுதியில் வளைவுகள் உள்ளது என தெரியும். ஆனால், புதிதாக வருபவர்களுக்கு, தொடர் வளைவுகள் தெரியாததால் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

ஒருசில நேரங்களில் வேகமாக வரும் கார்கள், ைபக்குகள் அருகில் உள்ள வயல்வெளியில் பாய்ந்து விழுந்து கவிழ்கின்றன. இந்த குறுகிய சாலையை விரிவாக்கம் செய்து வளைவு பகுதியில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை பொருத்த மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை, பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்துக்களும் குறையவில்லை என்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து குறுகிய வளைவு பகுதிகளை அகலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...