×

பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்காமல் 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சிறுவர் பூங்கா: பொதுமக்கள் அதிருப்தி

செங்கல்பட்டு, மார்ச் 10: செங்கல்பட்டு நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இடத்தில், சிறுவர்களுக்கான பெழுதுப்போக்கு பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், ரயில் நிலையம், அரசு கலைக்கல்லூரி, சட்டம் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. செங்கல்பட்டு நகராட்சியில், இதுவரை சிறுவர்கள், பெரியவர்களுக்கான பொழுதுப்போக்கு பூங்கா ஒன்றும் அமைக்கவில்லை. பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதுபோல் பல்வேறு வார்டுகளில், பூங்காவுக்காக தனி இடம் இல்லை.

செங்கல்பட்டு நகராட்சி ஜெசிகே நகர், அண்ணாநகர், அனுமந்த புத்தேரி  ஆகிய பகுதிகளில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலை, மாலை நேரங்களில் மர்மநபர்கள் சிலர் மது அருந்துவது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. குடியிருப்புகள் நிறைந்த ஜெசிகே நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த இடத்தில் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கவில்லை.

பொழுதுபோக்கு சாதனங்கள் பூச்செடிகள், மரங்கள் வைக்கவில்லை. இதனால், நகர மக்கள் காலை, மாலை நேரங்களில் பொழுது போக்குவதற்கு இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி குழந்தைகள் பொழுது போக்குவதற்கு விளையாடுவதற்கு ஒரு பூங்காவும் இல்லாததால், பெற்றோர் தங்களது பிள்ளைகளை விளையாட வைக்க முடியாமல் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு செங்கல்பட்டு நகராட்சியில் பூங்காவுக்காக  ஒதுக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்தில் சிறுவர்களுக்கான பூங்காக்களை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : park ,kid ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்