×

மாமல்லபுரம், கடப்பாக்கம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மாமல்லபுரம், மார்ச் 10: மாமல்லபுரம் மற்றும் கடப்பாக்கம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். மாமல்லபுரத்தில் மாசிமக தீர்த்தவாரி இருளர் இன மக்களால் வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. இருளர் இன மக்கள் தங்களது குல தெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடி கொண்டாடினர். முன்னதாக மாமல்லபுரம் தலசயன பெருமாள், திருக்குளத்தில் நேற்று முன்தினம் இரவு தேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் 3 முறை உலா வந்து மக்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என கோஷமிட்டு பெருமாளை வணங்கினர்.

இந்நிலையில், நேற்று காலை  தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலாவந்து, கடற்கரைக்கு சென்றடைந்தார். பின்னர் சங்கர தாழ்வார் கடலில் புனித நீராட்டினார். தொடர்ந்து சங்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கடலில் நீராடி பெருமாளை வழிபட்டனர். பின்னர்  தலசயன பெருமாள் ஒத்தவாடை தெரு, பஸ் நிலையம் வழியாக கோயிலை சென்றடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.  மாமல்லபுரத்தில் மாசிமகம் காலம் காலமாக மிகச்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து இருளர் மக்களும் தீர்த்தவாரிக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே மாமல்லபுரம் வந்து, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். மாசி மக பௌர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் ஒன்று கூடி அவர்களது பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என இரவு முழுவதும் பௌர்ணமி வெளிச்சத்தில் கடற்கரையில் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நேற்று அதிகாலையிலேயே எழுந்து கடலில் குளித்து மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர். மாசிமகமான நேற்று மகிழ்ச்சியான சுபநிகழ்ச்சிகள் செய்வது குறித்து கன்னியம்மனிடம் குறி கேட்டு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் காது குத்தல், மொட்டை அடித்தல் உள்பட பல  சுப நிகழ்ச்சிகளை செய்தனர்.  செய்யூர்: செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் கடற்கரையோரத்தில், ஆண்டுதோறும் மாசிமக கடல் தீர்த்தவாரி விழா நடப்பது வழக்கம். ஒருநாள் மட்டும் நடக்கும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒன்று கூடி 21 கடவுளை வணங்கி, கடலில் நீராடுவார்கள். கடந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள 2 கிராம மக்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டால், இந்த திருவிழா நடக்கவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு 79ம் மாசிமக தீர்த்தவாரி விழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள கோவில் உற்சவர்களான விநாயகர், முருகன்,  வேணுகோபால சுவாமி, திரௌபதி சமேத அர்ச்சுன சுவாமி, அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், அங்காளம்மன், கங்கையம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் உள்பட 21 சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, காலை 9 மணிக்கு சுவாமிகள் சமுத்திர தீர்த்தவாரி புறப்படுதல் நடந்தது. ஊர்வலமாக வந்த சுவாமிகள் கடற்கரையை அடைந்ததும் மாசி மக தீர்த்தவாரி காட்சியளித்தனர். தொடர்ந்து அங்கு சுவாமிகளுக்கு பல்வேறு தீபாராதனைகளும், பூஜைகளும் நடத்தப்பட்டன. இதில் இடைக்கழிநாடு, கொளத்தூர், மரக்காணம், செய்யூர், சூனாம்பேடு, கடப்பாக்கம், முதலியார் குப்பம், வெண்ணங்குபட்டு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அனைவரும் கடலில் நீராடி உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர்.

பல்வேறு பூஜைகளுக்கு பின் சுவாமிகள் மதியம் 12 மணியளவில் கடற்கரையில் இருந்து புறப்பட்டு திருவீதியுலா சென்று, அந்தந்த கோயில்களை அடைந்தனர். மாலை 6 மணியளவில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவில், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம், நீர்மோர், குடிநீர் ஆகிய வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை வழிமுறை ஆலய தர்மகர்த்தா ராஜசேகர், சுதாகர் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இதில் இடைக்கழிநாடு முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணி, மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள  ஏரி காத்த ராமர் என்கிற கோதண்டராமர் கோயிலில் மாசிமக தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் நடந்தது. கோயிலின் எதிரே உள்ள குளத்தில் ராமர், தேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், குளத்தின் நான்கு புறமும் சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்கியபடி குளத்தின் நீரில், தெப்பத்தில் பவனி வந்தார். அப்போது, பக்தர்கள் அனைவரும் ‘‘கோவிந்தா... கோவிந்தா..’’. என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். தெப்ப உற்சவ விழாவில் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, அச்சிறுப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, இணை ஆணையர் மாரிமுத்து, கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன், ஆய்வாளர்கள் அலமேலு, ஜீவா மேலாளர் வீரராகவன் ஆகியோர் செய்தனர்.

21 தலைமுறை பாவங்களும் நீங்கும்
ஆறு, குளங்களில் நீராடுவது என்பது வேறு. பௌர்ணமி நாளில் கடலில் நீராடுவது என்பது வேறு. மாசிமகப் திருவிழா அன்று கடலில் நீராடுவதால் 21 தலைமுறை பாவங்களும் நீங்கும். இதன்ன் மூலம் நவகிரக தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். மோட்சம் கிடைக்கும். அர்த்து சேது எனும் புண்ணிய பலன் மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பௌர்ணமி நாளில் கடலில் நீராடுவதால் ஆண்டின் 365 நாட்களும் நீராடிய காசி, ராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும். பெருமாளே கடலில் இறங்கி நீராடும் மாசி மக நன்னாளில் பெருமாள் குளித்த கடலில் நீராடினால் ‘‘பெறும் பேறு’’ உண்டாகும் என பக்தர்கள் மனமுருக மாசிமக நன்னாளில் கடலில் நீராடி சென்றது காணக் கிடைக்காத காட்சியாக இருந்தது.

Tags : Darshan ,Masi Maha Tirthavari Festival ,devotees ,Mamallapuram ,Kadalpakkam ,millions ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே