கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்த பஸ் நிறுத்தத்தில் முட்புதர் அகற்றம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 10:  கீழ்கருமனூர் கண்டிகை பயணியர் நிழற்குடை முன்பு மண்டிக்கிடந்த  புதர்கள், தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியால் நேற்று   அகற்றப்பட்டன. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் கீழ் கருமனூர் கண்டிகை, கயடை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு மற்றும்  தனியார் கம்பெனி ஊழியர்கள்  விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்  என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவள்ளூர்,  ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிபூண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர சென்னை - திருப்பதி சாலையில் உள்ள  கீழ்கருமனூர் கண்டிகை பஸ் நிறுத்தத்துக்கு வருகின்றனர்.

இவர்களது வசதிக்காக  கடந்த 2015 - 2016ம் ஆண்டு ₹ 3 லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது.  அதன் பிறகு பஸ் நிறுத்தத்தில் நின்று தாங்கள்  செல்ல வேண்டிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில்,  அந்த பஸ் நிறுத்தம் முன்பு செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டியது. விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்தது. எனவே, கீழ்கரமனூர் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த சூளைமேனி ஊராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் கீழ்கருமனூர் கண்டிகை  பஸ்  நிழற்குடை முன்பு கிடந்த புதர்களை அகற்றினர். இதையறிந்த அப்பகுதி பயணிகள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: