×

கோவில்பாதாகையில் தெரு மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்த தெருக்கள்: மக்கள் கடும் அவதி

ஆவடி, மார்ச் 10: ஆவடி மாநகராட்சி, கோவில்பாதாகை பகுதியில் பாரதி நகர், சாமி நகர், ஈஸ்வரி அவின்யூ, கிறிஸ்ட் காலனி, வடக்கு மாடவீதி, கிழக்கு மாடவீதி, கர்ணன் தெரு, வன்னியர் தெரு, சன்னதி தெரு, டேங்க்தெரு, மேட்டுத்தெரு, நாவிதர் தெரு,  வேப்பம் குளம், பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு உள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் பல வாரமாகவே எரிவதில்லை. இதனையடுத்து, அனைத்து தெருக்களும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் இரவில் தெருக்களில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவில்பாதாகை பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலின்போது அனைத்து தெரு மின் விளக்குகள் உடைந்து சேதமானது. அதன் பிறகு, அந்த விளக்குகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. தற்போது அங்கு உள்ள தெருக்களில் உள்ள அனைத்து  மின் விளக்குகளும்  எரிவதில்லை. இதனால், இரவில் தெருக்கள் இருள்சூழ்ந்து கிடக்கிறது. இரவு நேரத்தில் வேலை முடிந்து வரும் பெண் தொழிலாளர்களிடம் சமூக விரோதிகள் செயின் பறிப்பு, சில்மிஷம் செய்வது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதோடு மட்டுமல்லாமல், குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் அவசரத்தேவைக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இரவில்  நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை  நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. மேலும், டியூஷன் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வரும் மாணவ-மாணவிகள் இருள் சூழ்ந்து கிடக்கும் தெருக்களில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். அப்பகுதியில் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். போலீசார் பைக்கில் சரிவர ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனை பயன்படுத்தி இரவில் சமூக விரோதிகள் வீடு முன்பு நிறுத்தியிருக்கும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்று விடுகின்றனர். இதோடு மட்டுமில்லாமல், பூட்டிய வீடுகள் வீடுகளை உடைத்து கொள்ளை செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ெதருக்கள் இருளில் மூழ்கி கிடப்பதால் அதிகாலை மற்றும் இரவில் முதியவர், பெண்கள் வாக்கிங் செல்ல முடியவில்லை. எனவே,  கோவில் பாதாகை பகுதியில் உள்ள தெரு மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆவடி  மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : streets ,
× RELATED ரூ1000 நிவாரண தொகையை ரேஷன் கடை,...