கொருக்குப்பேட்டை இளையமுதலி தெருவில் மாநகராட்சி நிலத்தில் 4 மாடி வீடு கட்டும் அதிமுக பிரமுகர்: கண்டுகொள்ளாத அதிகாரிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 38வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை இளையமுதலி தெரு மற்றும் 47வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் சந்திப்பில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் இருந்து வந்தது. சில ஆண்டுகளாக அதிகாரிகள் இதனை முறையாக பராமரிக்காததால், சிதலமடைந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்துவதில்லை. பயனற்று கிடக்கும் இந்த கழிப்பிட கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு நூலகம் அமைத்து தரும்படி அந்த பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் அதிமுக பிரமுகர் ஒருவர், சிதிலமடைந்து காணப்பட்ட இந்த பொது கழிப்பிட கட்டிடத்தை இடித்து அகற்றினார். அங்கு, நூலகம் அமைக்கப்படும் என மக்கள் நினைத்திருந்த நிலையில், அதிமுக பிரமுகர் கழிப்பிடம் இருந்த இடத்தை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து, புதிதாக 4 மாடி கொண்ட வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிமுக நிர்வாகி ஆக்கிரமித்து வீடு கட்டுவது தெரிந்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். அவர், புதிதாக கட்டும் 4 மாடி கட்டிடத்துக்கும் முறையான அனுமதி பெறவில்லை, என கூறப்படுகிறது. இதுபற்றி மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொடர்ந்து, எந்த இடையூறுமின்றி அதிமுக பிரமுகர் வீடு கட்டி வருகிறார். காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு, தைரியமாக வீடு கட்டி வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு, எங்களுக்கு நூலகம் அமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>