×

தீவுத்திடலில் 72 நாட்கள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 9.83 லட்சம் பேர் கண்டுகளித்தனர்

 சென்னை: தமிழக அரசின் 46வது தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 28 மாநில அரசுத்துறைகள், 15 மாநில பொதுத்துறை நிறுவனங்கள், 1 மத்திய அரசு நிறுவனம், 3 பிற மாநில அரசு நிறுவனங்கள், அரிமா சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம் மற்றும் 110 தனியார் அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் இருந்து பெறப்படும் பிரசாதங்கள் பொருட்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் ரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, இதய வரைவலை பரிசோதனைகள் செய்யப்பட்டது.

பெரியவர்களும், சிறியவர்களும் கண்டுகளிக்கும் வகையில் நாட்டியம், நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தினந்தோறும் மாலை 6 முதல் 9 மணி வரையில் நடத்தப்பட்டது. 80,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள், சிறுவர் ரயில், மீன் காட்சியகம், 3டி தியேட்டர், 3டி செல்பி மற்றும் 18 அதிநவீன ராட்டினங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பொருட்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை 9.83 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.6.38 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் பா.பென்ஜமின் முன்னிலை வகித்தார். சிறந்த அரங்குகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார். விழாவில் சுற்றுலா துறை செயலாளர் சந்தீப் சச்சேனா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆணையர் பொ.ராஜேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : island ,tourism exhibition ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...