×

மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஒகேனக்கல் நீருடன் கலந்து விநியோகிக்க கூடாது

தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி தண்ணீரை ஒகேனக்கல் கூட்டு குடிநீருடன் கலந்து விநியோகம் செய்யக்கூடாது என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நல்லம்பள்ளி, பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களில், உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 2 நாள் அறிமுக பயிற்சி இண்டூரில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு பேசியதாவது: ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை, கழிவுநீர் பிரச்னை, தெரு விளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், ஒகேனக்கல் கூட்டுகுடிநீருடன் கலந்து விநியோகம் செய்வதாக புகார் வருகிறது.

இதை தவிர்க்க வேண்டும். நிலத்தடி தண்ணீரை ஒகேனக்கல் கூட்டுகுடிநீருடன் ஒன்றாக கலந்து விநியோகம் செய்யக்கூடாது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, கிராமபுறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையாமல், திருமணம் செய்து வைக்க கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் இடை நிற்றலை தவிர்த்து, அனைத்து குழந்தைகளும் பள்ளி சென்று கல்வி கற்க வேண்டும். கோடைகாலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், சுசீலா, சுருளிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஸ்குமார், பேகத்நிஷா மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...