×

தர்மபுரியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பால், தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில், சுமார் 5ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அவற்றை பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் தக்காளி சந்தைக்கு சராசரியாக 100 டன் வரை விற்பனைக்கு வரும். கேரளா மற்றும் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து தக்காளியை வாங்கி செல்வார்கள். தற்போது கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தக்காளி அறுவடை செய்யப்படுவதால், அங்குள்ள வியாபாரிகள் தர்மபுரிக்கு வந்து வாங்குவது குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை அனைத்து இடங்களிலும் சரிந்துள்ளது.

 தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக கிலோ ₹5 என விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி விலை கிடைக்காததால், மொரப்பூர் விவசாயிகள் மொரப்பூர்- கம்பைநல்லூர் சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். தர்மபுரி- திருப்பத்தூர் சாலை திப்பம்பட்டி கூட்ரோடு பகுதியிலும், தக்காளி கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கோடை காலத்தில் தக்காளி மகசூல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கொள்முதல் விலை ஒரு கிலோ ₹2 முதல் ₹4க்குள் வாங்குகின்றனர். இது பறிப்புக்கூலிக்கு கூட கட்டுப்படி ஆகாததால், சாலையோரத்தில் தக்காளியை கொட்டி விட்டும் நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...