×

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி தாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம்

தாராபுரம், மார்ச் 10: குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி தாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தாலுகா செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட தலைவர் தமிழ்முத்து, முஸ்லிம் லீக், மற்றும் அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்பில் முகமது யூசுப்,முஸ்லீம்லீக் சாதுல்லா  ஜமாத் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சுதந்திர இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரு சட்டத்தை எதிர்த்து  மக்களும்,மாணவர்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைதி போராட்டத்தை சகிக்க முடியாமல் டெல்லியிலே பா.ஜ.வினர் தங்களது சட்ட விரோத கும்பலை இறக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட வைத்தார்கள் என நாடே குற்றம் சாட்டுகிறது.

இந்த நாடு ஜனநாயக அமைப்பில் உள்ளது. இந்த ஜனநாயக நாட்டில் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய அரசாங்கம் அதனுடைய நடவடிக்கைகள் மக்களுக்கு எதிராக இருக்குமானால் அவற்றை எதிர்த்து போராடக்கூடிய உரிமையை அரசியல் சாசன சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. தேசம் என்பது ஒரு ஜாதிக்கு உரியது அல்ல. 130 கோடி மக்கள் தான் தேசம். இவர்கள் அனைவரையும் ஒன்று படுத்துவதுதான் தேசநலன். அவர்களுக்காக போராடுவதுதான் உண்மையான தேசபக்தி. அதற்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராக இருக்கின்ற வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதிபட நின்று போராட வேண்டும், என்று அனைத்து தமிழ் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

புட்நோட்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தாராபுரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் சிறப்புரையாற்றினார்.

Tags : rally ,All India Minority Protection Movement ,TNA ,Tarapuram ,withdrawal ,
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி