×

கோடை விழா துவங்க இருப்பதால் நகராட்சி பூங்காக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி, மார்ச் 10: கோடை  சீசன் துவங்கும் முன் ஊட்டி நகரில் உள்ள அனைத்து நகராட்சி பூங்காக்களையும்  பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு  பகுதிகளிலும் நகராட்சி பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை கடந்த பல  ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்ட நிலையில், பெரும்பாலான பூக்காக்கள்  ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. சில பூங்காக்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக  மாறி உள்ளன. இந்நிலையில், கடந்த 2009-10ம் ஆண்டில் நகராட்சிக்குட்பட்ட கோத்தகிரி  சாலையில் உள்ள பூங்கா, டேவிஸ், பாறை முஜீஷ்வரர் கோயில், போஸ் திடல் பூங்கா  உட்பட 5 பூக்காக்களை பல லட்சம் செலவில் நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது.  மேலும், செயற்கை நீருற்று உட்பட பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன.  

ஆட்சி மாற்றத்திற்கு பின் இப்பூங்காக்களை பராமரிக்கும்  பணியில் நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. கடந்த  திமுக., ஆட்சியின் போது சீரமைக்கப்பட்ட பூங்காக்கள் அனைத்தும் தற்போது  புதர் மண்டி கிடக்கிறது. பல பூங்காக்கள் மீண்டும் சமூக விரோதிகளின்  கூடாரமாக மாறி வருகிறது. இதில், டேவிஸ் பூங்கா, பஸ் நிலையம் பூங்கா  போன்றவைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதேபோல், கோத்தகிரி சாலையில்  அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள நகராட்சி பூங்காவும் ஒன்று.  இவைகளை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில், பொலிவிழந்து  காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும். இங்குள்ள செயற்கை நீருற்றை  சீரமைத்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதேபோல்  மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பூங்காவில் உள்ள செயற்கை நீருற்றையும்  சீரமைத்து அங்கு தண்ணீர் வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ேமலும், இந்த  பூங்காவை சீரமைத்து இருக்கைகள் அமைத்தால் மத்திய பஸ் நிலையத்திற்கு வரும்  சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது.  எனவே, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து சிறிய பூங்காக்களையும் இம்மாதம்  இறுதிக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளூர் மக்கள் மற்றும்  சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : parks ,summer festival ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது