×

நகராட்சி சர்க்கஸ் மைதானத்தில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

பொள்ளாச்சி, மார்ச். 10: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள  நகராட்சிக்குட்பட்ட சர்க்கஸ் மைதான காலியிடத்தில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் குடியிருப்பு மிகுந்த இடத்தில் ஒன்றான மகாலிங்கபுரத்தின் ஒரு பகுதியில் சர்க்கஸ் மைதானம் செயல்பட்டு வந்தது. நகராட்சிக்கு சொந்தமான இந்த காலியிடத்தில்,  நகரில் ஆங்காங்கே நடக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிக்கு தேவைக்கான மண் மற்றும் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனுடன் சேர்ந்து வெளியே இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் கொட்டப்படும் செயல் தற்போது அரங்கேறியுள்ளது. கடந்த சில மாதமாக, நகராட்சிக்குட்பட்ட இந்த காலியிடத்தில் சரக்கு வாகனங்களில் இருந்து வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் குப்பை மற்றும் கோழிக்கழிவு உள்ளிட்டவை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர்.

ரோட்டோரம் உள்ள திறந்தவெளி காலியிடத்தில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வேதனையடைகின்றனர். மகாலிங்கபுரத்தில் உள்ள சர்க்கஸ் மைதானம் பொலிவிழந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில், அந்த மைதானத்தில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து பயிற்சி எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. நகராட்சிக்குட்பட்ட பல ஏக்கரில் உள்ள இந்த மைதானத்தில், நாளுக்கு நாள் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவது தன்னார்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : circus stadium ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு