×

திருச்சி சாலைக்கு பதிலாக முறைகேடாக அவினாசி சாலையில் இயக்கப்படும் அரசு மப்சல் பஸ்கள்

கோவை, மார்ச் 10: அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவைகளில் 1500க்கும் மேற்பட்ட மப்சல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர், கரூர், தேனி, உடுமலை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், மேட்டுப்பாளையம், சத்தி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மப்சல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஈரோடு, நாமக்கல், சேலம் செல்லும் பஸ்கள் அவினாசி சாலை வழியாகவும், திருப்பூர், கரூர், தேனி உள்ளிட்டவைகளுக்கு செல்லும் பஸ்கள் திருச்சி சாலை வழியாகவும் செல்ல வேண்டும். ஆனால் திருச்சி சாலையில் தற்போது சுங்கம் முதல் ராமநாதபுரம் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே திருப்பூர், கரூர் செல்லும் பஸ்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை காரணம் காட்டி போக்குவரத்து கழக அதிகாரிகளின் அனுமதியின்றி திருச்சி சாலையில் செல்லும் திருப்பூர், கரூர் வரை இயக்கப்படும் பஸ்கள் அவினாசி சாலையில் சென்று ஹோப்ஸ் வழியாக சிங்காநல்லூரையும், லட்சுமி மில் சென்று அங்கிருந்து ராமநாதபுரத்தை அடைகின்றன. பின்னர் அங்கிருந்து திருச்சி சாலையில் செல்கின்றன. இதனால் கே.ஜி. மருத்துவமனை பஸ் ஸ்டாப், ஸ்ரீபதி, சுங்கம், ராமநாதபுரம் ஆகிய பஸ் ஸ்டாப்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மேற்கண்ட பஸ் ஸ்டாப்பில் திருப்பூர், பல்லடம், கரூர், பள்ளபட்டி, சூலூர், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் தடம் மாறி அரசு பஸ்களை இயக்கி வரும் அரசு நடத்துனர், ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Avinashi Road ,Trichy Road ,
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு...