×

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 300 குட்டைகள் சீரமைக்கப்பட்டுள்ளன

கோவை, மார்ச் 10:  கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 300 குட்டைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் சீரமைத்தல், மரக்கன்று நடவு, பண்ணைக் குட்டை அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீர் மேலாண்மை தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட ஊராட்சிகளில் பராமரிப்பில்லாமல் காணப்படும் குளம், குட்டைகளை சீரமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஊராட்சி பகுதிகளில் 300 குட்டைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதில் அன்னூர்  44, காரமடை 42, கிணத்துக்கடவு  38, மதுக்கரை  1, பெ.நா.பாளையம் 22, பொள்ளாச்சி வடக்கு 8, பொள்ளாச்சி தெற்கு 10, எஸ்.எஸ்.குளம் 13, சுல்தான்பேட்டை 77, தொண்டாமுத்தூர்  2, சூலூர் 43 குட்டைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதுபோக அன்னூர் வட்டாரத்தில் பாசனத்திற்குள்பட்ட 3 சிறு குளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் வரும் நிதியாண்டில் 200க்கும் மேற்பட்ட குட்டைகளை சீரமைப்பதற்கான ஆய்வுகளை ஊரக வளர்ச்சித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து தென்மேற்குப் பருவமழைக்கு முன் ஆக்கிரமிப்புள்ள நீர்வரத்து வாய்க்கால்களை கண்டறிந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் பருவமழையை எதிர்பார்த்து குளம், குட்டைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு நிதியாண்டு சீரமைக்கப்பட்ட 300 குட்டைகளில் ஒருசில குட்டைகளில் கடந்த பருவமழையின்போது கிடைத்த தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள நீர்வழிப்பாதைகள் குறித்து வருவாய்த் துறையிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை துவங்குவதற்குள் நீர்வழிப்பாதைகள் மீட்கப்பட்டு குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...