×

குட்டைக்கு தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

கோபி, மார்ச் 10:   கோபி அருகே ஆபத்தான நிலையில் உள்ள குட்டைக்கு தடுப்பு சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோபியில் இருந்து கலிங்கியம், செம்மாண்டாம்பாளையம், அவ்வையார் பாளையம் வழியாக அயலூர், குருமந்தூர், கொளப்பலூர் செல்லும் சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் செம்மாண்டாம்பாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் அருகே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவில் சுமார் 10 அடி ஆழமுள்ள கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் குட்டை உள்ளது. இந்த குட்டையில் பெரும்பாலான நாட்கள் நீர் நிரம்பியே இருக்கும்.

இந்த சாலை குறுகிய சாலையாக இருப்பதாலும், அதிகளவு வாகனங்கள் செல்வதாலும் எதிரெதிரே வாகனங்கள் வரும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது குட்டையில் தவறி விழும் அபாயம் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: செம்மாண்டாம்பாளையத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த குட்டையை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் அல்லது குட்டையை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

Tags : pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...