×

சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை

சத்தியமங்கலம், மார்ச் 10: நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வினர் தமிழக  சட்டப்பேரவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்  நிறைவேற்ற மாட்டார்கள் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர்  ஈஸ்வரன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாலு, ஈரோடு புறநகர் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் நடராஜ், சரவணன், ஜெகதீசன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த அ.தி.மு.க.வினர் தமிழக சட்டசபையில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை.

காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் ஆந்திர முதல்வரை சந்தித்துள்ளனர். இதேபோல் தெலுங்கானா முதல்வரையும் சந்தித்து இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து முதல்வர் பேசியது அப்பகுதியில் உள்ள அமைச்சர்கள் கொடுத்த அழுத்தம்தான் காரணம். இங்கே ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என நாங்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.  

இப்போது தனி மாவட்டமாக அறிவித்தால் இங்குள்ள அமைச்சர்கள் தனக்கு புகழ் சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரபங்கா மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும் என கொ.ம.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து முதல்வர் நாமக்கல் மாவட்டம் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார். இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி வறட்சி பகுதியாக உள்ளதால், மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் இப்பகுதியையும் சேர்க்க வேண்டும். என்றார்.

Tags : CAA ,legislature ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்