×

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு

கோவில்பட்டி, மார்ச் 10: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு கோவில்பட்டி ஆர்டிஓ விஜயாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காய சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
 இதையடுத்து பெய்த மழையை தொடர்ந்து பயிர்களுக்கு மருந்து தெளித்தல், களையெடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். மேலும் நவீன  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 80 நாட்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய உளுந்து, பாசிப்பயறு விதைகளை விதைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மார்கழி மாதம் பரவலாகப் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசிப்பயறு விளைச்சல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது.

 ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் உளுந்து, பாசிபயறில்  வழக்கமாக கிடைக்க வேண்டிய 8 குவிண்டாலுக்கு பதிலாக 2 குவிண்டால் மட்டுமே அதுவும் தரமின்றி கிடைத்த மகசூலால் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ.2500 மட்டுமே விலை கிடைத்தது. இதுகுறித்த புகார்களை அடுத்து வேளாண், வருவாய்த் துறையினர் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பை ஆய்வுமேற்கொண்டதோடு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்தும் பலனில்லை.  இதையடுத்து தொடர்மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். வரும் 31ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் விவசாய மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் ஏராளாமான விவசாயிகள் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு திரண்டுசென்று, ஆர்டிஓ விஜயாவிடம் மனுக்கள் அளித்தனர்.

Tags : Drought ,Thoothukudi District ,
× RELATED தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வேலூர்...