×

விளையாட்டு மைதானத்தை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி, மார்ச் 10: புளியம்பட்டியில் பொதுபயன்பாட்டிற்கான விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி கலெக்டர்  அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. இந்நிலையில்  புளியம்பட்டி கிராம மக்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் லாரன்ஸ்  தலைமையில் தூத்துக்குடி கலெக்டர்  அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அங்கு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.   இதையடுத்து  மக்கள் சார்பில் ஊர்த் தலைவரும், தமமுக  ஓட்டப்பிடாரம் ஒன்றிய விவசாய அணி தலைவருமான மூர்த்தி, கலெக்டர் சந்தீப்  நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தார்.  மனு விவரம்:  எங்கள் ஊர் வடக்கு காலனியில் மக்கள் பயன்பெறும் வகையில் நாங்கள் வாங்கி கொடுத்த நிலத்தில் வீடு  கட்டி குடியேறுவதற்கு ஏதுவாக கடந்த 2000ம் ஆண்டு அரசின் சார்பில் எங்கள்  பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

வீட்டுமனைப்பட்டா  வழங்கிய இடம்போக மீதமுள்ள இடத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில்  விளையாட்டு மைதானம், மருத்துவமனை மற்றும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.  இந்த பொது இடத்தை தற்போது வரை ஊர் மக்கள் பொது மைதானமாகவே  பயன்படுத்தி வரும் நிலையில், இந்த இடம் தங்களுக்குரியது என சிலர் வருவாய்த்துறை மூலமாக போலி பட்டா பெற்றுள்ளனர். எனவே, விளையாட்டு மைதானத்திற்கான பொது இடத்தினை மீட்டுத்தருவதுடன், போலி பட்டா வழங்குவதற்கு  உறுதுணையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Siege ,Playground Rescue Collector ,Office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...