×

அரசு, நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பிட தனி அறை விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வேலூர், மார்ச் 10:அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய சத்துணவு சாப்பிட தனி அறைகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்கள் மூலம்- 1 முதல் 10ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.மதிய உணவை மாணவர்கள் மரத்தடியிலும், வகுப்பறை வெளியே உள்ள மைதானத்திலும் அமர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் மதிய சத்துணவு சாப்பிட மாணவர்களுக்கு தனி அறை வசதி அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட அனைத்து பள்ளிகளிலும் காலியாக, பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது தொடர்பாக சமூக நல ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.முதற்கட்டமாக ஒன்யறித்திற்கு ஒரு பள்ளி வீதம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். அப்பள்ளிகளில் பயன்படாத வகுப்பறைகளை மாற்றி உணவருந்தும் கூடங்களாக சீரமைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை,

அந்த பள்ளியில் உள்ள மொத்த வகுப்பறைகளின் எண்ணிக்கை, அதில் கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாத வகுப்பறையின் எண்ணிக்கை என முழு விவரங்களை தயாரிக்க வேண்டும். பின்னர் தனியாக வழங்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் இமெயில் முகவரிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : school department ,schools ,lunch ,
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு