×

குமரியில் ெகாரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை

நாகர்கோவில், மார்ச் 10: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையங்கள், ஏடிஎம் சென்டர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்துவரும் வாகனங்களில் இருப்பவர்களிடமும்  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவி வருகிறது. சுமார் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 1086 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால், குமரி மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக  சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. முன் கவனிப்பு வார்டும் திறந்து உள்ளனர். ஏற்கனவே 5 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. தொடர்ந்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று  காலை சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை மற்றும் பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்களின் கைப்பிடிகள், இருக்கைகளில் மருந்து தெளிக்கப்பட்டது. ஏ.டி.எம். சென்டர்களின் கைப்பிடிகள், டிக்கெட்  கவுண்டர்களில் உள்ள கைப்பிடிகள், டிரைவர், கண்டக்டர்களின் ஓய்வு அறைகளில் உள்ள இருக்கைகள் மற்றும் கதவு கைப்பிடிகளில் மருந்து தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும் என்று மாநகராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே உத்தரவின் பேரில் குமரி - கேரள எல்லையான கொல்லங்கோடு, சூழால் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. கார், பைக்குகள், வேன்கள், பஸ்களில் வரும் பயணிகளில் யாருக்காவது, உடல் நிலை பாதிப்பு உள்ளதா? என்பது பற்றி மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சுகாதார துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜன் மேற்பார்வையில் இந்த சோதனை நடக்கிறது. தொடர் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் இருந்தால் அவர்களை திரும்பி செல்ல அறிவுறுத்துகிறார்கள். இல்லையென்றால், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளனர். இதே போல் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கைகளை சுத்தமாக வைத்திருத்தல், இருமல், தும்மல் வரும் போது முகத்தை  கர்சீப்பால் மூடிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளையும் சுகாதார துறையினர் வழங்கி வருகிறார்கள்.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து