×

ஈரானில் தவிக்கும் மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை வலியுறுத்தல்

நாகர்கோவில், மார்ச் 10: சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினரும், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவருமான ஜஸ்டின் ஆன்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸ் அச்சத்தினால் உலகம் முழுவதும் மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். ஈரானிலுள்ள இந்திய மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கதிகலங்கி போயுள்ளனர். மீனவர்கள் தங்களை தாய்நாடு கொண்டு செல்ல வேண்டுமென தினமும்  கோரிக்கை வைக்கின்றனர்.அரசு அனுப்பிய மருத்துவக்குழு   இவர்களை சந்தித்ததாக இம்மீனவர்கள் கூறுகின்றனர், ஆனால் யாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை எனத்தெரிகிறது. தூதரகத்தில் தொடர்பு கொண்டபோது முதலில் மாணவர் விசாவில் வந்தவர்களுக்கும், சுற்றுலா விசாவில் வந்தவர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படுமென்று  அதிகாரிகள் தெரிவித்ததாக இம்மீனவர்கள்  தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க வைரஸ் பரவி வரும் வேளையில், இவர்களது ஏற்பாடுகளை செய்ய 10 நாட்கள் வரை ஆகுமென தூதரக அதிகாரிகள் தெரிவித்ததால் இம்மீனவர்களும், இவர்களது உறவினர்களும் கலக்கமடைந்துள்ளனர்.  

ஈரானிலுள்ள கீஸ், சாரக், முகம், சீரோ, லாவன், புஷர், கங்கோன் ஆகிய இடங்களில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம், கடியப்பட்டணம், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, தூத்தூர், ராஜாக்கமங்கலம்துறை, குறும்பனை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் மாவட்டங்களை சேர்ந்த    721 மீனவர்களை போர்க்கால அடிப்படையில் தாயகம் கொண்டுவர வேண்டுமென பாரத பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஈரானிலுள்ள இந்திய தூதர் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : International Fisheries Development Foundation ,fishermen ,Iran ,
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...