×

சுரங்கப்பாதை அமைப்பதில் அலட்சியம் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள்

ஆவடி: ஆவடி ரயில்வேகேட் எப்போதும் மூடியே கிடப்பாதால், அதை கடந்து ெசல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து உடனே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய விமானப் படை, ஆவடி கனரக தொழிற்சாலை, மத்திய வாகன கிடங்கு, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், படைத்துறையின் உடை தொழிற்சாலை உள்ளிட்ட இந்திய ராணுவ பாதுகாப்பு துறை நிறுவனங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு சிறப்பு காவல்படைகள், ரயில்வே தொழிற்சாலை மற்றும் தனியார் தொழிற்சலைகளும் உள்ளன. மேலும், ஆவடி பகுதியைச்சுற்றி தனியார் பொறியியல், கலை, மருத்துவ கல்லூரிகள் மற்றும் பள்ளிகளும் ஏராளமாக உள்ளன. ஆவடி எம்.டி.எச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் நேரு பஜார் உள்ளது. இந்தப் பகுதிக்குள் நுழைய ஆவடி ரயில்வே கேட்டை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

ஆவடி ரயில் நிலையத்தில் நான்கு வழித்தடங்கள் உள்ளன. இந்த தடங்களில் எக்ஸ்பிரஸ், நகர்ப்புற மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் என தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. சராசரி 5 நிமிடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு ரயில், ஆவடி ரயில்வே கேட்டை கடந்து செல்வதால், 24 மணி நேரமும் ரயில்வே கேட் மூடியே கிடக்கும்.  இதனல், பொதுமக்கள் ரயில்வே கேட்டை தாண்டாமல் செல்வது என்றால், இரு பகுதிகளை சேர்ந்தவர்களும் 2 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டும். அப்படி சுற்றிவர தாமதமாகும் என்பதால் பூட்டிக்கிடக்கும் ரயில்வே கேட்டுக்குள் நுழைந்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தண்டவாளத்தை கடக்கின்றனர். அந்தசமயத்தில், வேகமாக வரும் ரயிலில் சிக்கி, பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் கை, கால்களை இழக்கின்றனர். மேலும், எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது, அதற்கு வழி விடுவதற்காக ரயில்வே கேட்டை மறைத்து அடிக்கடி சரக்கு ரயிலும் நிறுத்தப்படுகிறது. அதனால் கேட்டுக்குள் புகுந்து செல்லக்கூட வழியின்றி, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் 30 நிமிடத்திற்கும் மேல் ரயில்வே கேட் அருகில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் போக்குவரத்து சிக்கலை தீர்க்க ஆவடி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், ரயில்வே அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், ரயிலில் அடிப்பட்டு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிர் பலி தொடர்கிறது.இனி மேலாவது, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு ஆவடி ரயில்வேகேட் இருக்கும் இடத்தில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைத்து விபத்தை தடுக்கவும், போக்குவரத்து பிரச்னையை தீர்க்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Passengers ,motorists ,railway ,tunnel ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!