×

பேசின்பிரிட்ஜ் சுவரில் வேகமாக மோதியதால் பைக்குடன் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

பெரம்பூர், மார்ச் 9: பேசின்பிரிட்ஜ் ரயில்வே மேம்பால தடுப்பு சுவரில் மோதி பைக்குடன் கீழே தூக்கி வீசப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார். சென்னை ராஜமங்கலத்தை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் டேனியல் (23). பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் (23). நண்பர்களான இவர்கள், ஒன்றாக வேலை தேடி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு  சென்றுவிட்டு, அதிகாலையில் அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். பெரம்பூர் அடுத்த பேசின்பிரிட்ஜ் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இருவரும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு தண்டவாள பகுதியில் கீழே விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த லிவிங்ஸ்டன் டேனியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த கார்த்திக்கை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தகவலறிந்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சியாமளா தேவி சம்பவ இடத்துக்கு வந்து, லிவிங்ஸ்டன் டேனியல் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது