×

8 கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சியை கண்டித்து மன்னார்குடியில் வர்த்தகர்கள் சாலை மறியல்

மன்னார்குடி, மார்ச் 6: மன்னார்குடியில் 8 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததை கண்டித்து வர்த்தகர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான 252 வணிக கடைகளுக்கான வாடகை கட்டணம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி 30 மாதங்கள் முன் தேதியிட்டு பன்மடங்கு உயர்த்தப்பட்டது. நகராட்சியின் வணிகர் விரோத செயலை கண்டித்து கடந்த மாதம் 28ம் தேதி கண்டன பேரணி, முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. மேலும் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டதால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ புண்ணியக்கோட்டி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்நிலையில் நேற்று காலை நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, கோமதி ஆகியோர் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் நிலுவை தொகைகளை கட்டவில்லை எனக்கூறி மன்னார்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள 8 கடைகளுக்கு திடீரென சீல் வைத்தனர்.முன்னறிவிப்பின்றி நகராட்சி அதிகாரிகள் கடைகளை சீல் வைத்ததால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வர்த்தக சங்க நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார்குடி நகரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி விட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் பேருந்து நிலையத்தில் திரண்டு நகராட்சியை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதில் சந்தைப்பேட்டை பகுதியில் சலூன்கடை வைத்துள்ள மனோகரன் (40) என்பவர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அங்கு வந்த டிஎஸ்பி கார்த்திக் மற்றும் போலீசார் வர்த்தகர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி கார்த்திக், வட்டாட்சியர் கார்த்திக், நகராட்சி ஆணையர் திருமலை வாசன், எம்எல்ஏ டிஆர்பி ராஜா, வர்த்தக சங்கம் சார்பில் அதன் தலைவர் பாரதி ஜீவா, பொதுச்செயலாளர் ஆனந்த், அமைப்பு செயலாளர் கருணாநிதி, துணைத் தலைவர் கைலை ஊமைத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வருகிற 13ம் தேதிக்குள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய வாடகை தொகையை நகராட்சியில் கட்டி விடுவதாக வணிகர்கள் உறுதியளித்தனர். அதுவரை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. முன்னறிவிப்பின்றி சீல் வைக்கப்பட்ட கடைகளை உடனடியாக திறந்து விடுவதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற வணிகர்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.இச்சம்பத்தால் சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்ஏ உறுதிகூட்டத்தில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா பேசுகையில், வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பன்மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் அதன் நிலுவைதொகை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து துறை சார்ந்த அமைச்சரிடம் பேசி நல்ல முடிவை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Tags : Mannargudi ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்