×

இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செயல்விளக்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: திருத்துறைப்பூண்டி அரு கே பனையூர் கிராமத்தில் இயற்கை முறையில் பருத்தி சாகுபடி குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா அறுவடை முடித்தபின் நஞ்சை தரிசில் வாய்ப்புள்ள இடங்களில் பருத்தி சாகுபடியினை வேளாண்மைத்துறை ஊக்கப்படுத்தி வருகிறது.நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்கின்றனர். பருத்திக்கு சில ஆண்டுகளாக நல்ல விலை கிடைப்பதால் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வருடம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சார்ந்த கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் அளவிற்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது பருத்தி சாகுபடியில் கடந்த ஆண்டு சப்பாத்தி பூச்சி எனப்படும் மாவுப்பூச்சியின் தாக்குதலால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். கடந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருந்தது. இவ்வருடமும் வெப்பம் அதிகமாக இருப்பதால் மாவுப்பூச்சியின் தாக்குதலில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மைத் துறையின் மூலம் இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அட்மா திட்டத்தின்கீழ் செயல்விளக்கங்கள் அமைத்து அதன் மூலம் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிகளை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி வைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு பொறிகளை அமைத்து இரவு நேரத்தில் பூச்சிகளை கவர்ந்திழுத்து அழித்தல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி மூலிகை கரைசல் தயாரித்து பயன்படுத்துதல், பஞ்சகாவ்யா தயாரித்து பயிரில் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்துதல் முதலிய தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வயல்வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி பயிரிட்டு அதன் மூலம் அதிக அளவில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்து இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து விவசாயிகளுக்கும் சூரியகாந்தி விதைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செயல்விளக்கங்களை வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் செய்து காட்டினார். அப்போது விவசாயிகளுக்கிடையே ரசாயன மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்விளைவுகள் சுற்றுச்சூழல் பாதிப்பு, பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வேளாண்மைத்துறையின் பரிந்துரைகள் இன்றி ரசாயன மருந்துகள் வாங்கி பயன்படுத்த கூடாது என விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இவ்வாண்டு பருத்தி சாகுபடியில் ரசாயனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை இடுபொருள்கள் பயன்படுத்துவோம் என விவசாயிகள் அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.வேளாண்மை உதவி அலுவலர் சிவரஞ்சனி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் வேதநாயகி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சௌமியா மற்றும் முன்னோடி விவசாயி மார்ட்டின், கம்பர், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்