×

போலீசார் குவிந்ததால் பரபரப்பு ராமநாதபுரத்தில் இருந்து குடந்தைக்கு மேய்ச்சலுக்கு வந்த கிடை மாடுகள்

கும்பகோணம், மார்ச் 6: ராமநாதபுரத்தில் இருந்து குடந்தைக்கு மேய்ச்சலுக்காக கிடை மாடுகள் அழைத்து வரப்பட்டுள்ளது. வயல்களில் கிடை போடும் தொழிலை கொண்டவர்களை கிதாரி என்பர். இவர்கள் கிராமத்தில் உள்ள 200 மாடுகளுக்கு மேல் ஒன்று சேர்த்து கொண்டு ஆண்டுதோறும் கோடை காலத்தில் மட்டும் மேய்ச்சலுக்காக காவிரி பாசனப் பகுதிக்கு வருவர். இப்பகுதியில் குறுவை, சம்பா அறுவடை முடித்த பின் வயல்களை கொஞ்ச காலத்துக்கு ஆறப்போடுவர். இதில் சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்த பின் ஒரு அடி நீளத்துக்கு அடித்தூர் இருக்கும்.

இதை மாடுகள் விரும்பி உண்ணும். மாடுகளை பகல் முழுவதும் மேய விட்டு விட்டு ஒரு வயலில் கிடை போடுவர். மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால் அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது. தற்போது கும்பகோணம் அடுத்த அசூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் மேய்ச்சலுக்காக கிடை அமைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படும் கிடைக்கு தேவையான மாடுகள், அப்பகுதியில் மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பதாலும், கோடை காலத்தில் இரை கிடைப்பது அரிது என்பதால் இப்பகுதி–்க்கு கொண்டு வருகிறார்கள். மேலும் பல ஆண்டுகளாக பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் கிடைக்கு அனுப்பி வைப்பர். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்து கன்றுகளை ஈனும்.
வயலிகளில் ஒருநாள் இரவு கிடை போடுவதற்கு ஒரு மாட்டுக்கு ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிடையில் 500 மாடுகள் வரை இருக்கும். மாடுகள் கிடை போட்ட வயலை ஒரு வாரம் கழித்து உழுது போட்டால் நல்ல உரமாக மாறும்.

ஈரம் இருக்கும்போது அந்த வயலில் பசுந்தாள், சனப்பு, கொழுஞ்சி ஆகிய செடிகளை தெளித்து விட்டு பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழுதால் வயலுக்கு நல்ல உரம் கிடைக்கும். இதுகுறித்து விவசாயி சுவாமிநாதன் கூறுகையில், அதிக விளைச்சலுக்காக வயலில் ரசாயன உரங்களை தெளித்து மண்ணை மலடாக்கி விட்டோம். இப்போது நிலங்களில் இயற்கை வளம் குறைந்து விட்டது. தற்போது தேவையான வளத்தை மீட்டெடுக்க வேண்டும். இயற்கை உரத்துக்காகவும், அதிக விளைச்சலுக்காகவும் ஆடு, வாத்து, மாடுகளை கிடை போடும் பழக்கம் காலம் தொட்டு இருந்து வருகிறது.

ஒருமுறை மாடு கிடை போட்டால் 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பலன் கிடைக்கும். மாடுகளை கிடை போடும்போது நாட்டு மாடுகளாக இருந்தால் நல்லது. தற்போது கோடைகாலம் துவங்குவதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் கிடை போடுவது துவங்கியுள்ளது. விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாடுகளை கண்டிப்பாக வயல்களில் கிடை போட வேண்டும் என்றார்.

Tags : Kundankadu ,Ramanathapuram ,
× RELATED நாமக்கல்லில் நாட்டுஇன மாடுகள்...