×

அறந்தாங்கி அருகே குளமங்கலம் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை சேதம்

அறந்தாங்கி, மார்ச் 6: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து கையோடு பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையின் தனி பழுதுபார்க்கும் திட்டத்தின்கீழ் ஒன்னரை கிலோ மீட்டர் வரையிலான சாலை ரூ. 22.50 லட்சத்திற்கு புதிதாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை பணிகள் முடிந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட அந்த சாலை சிதலமடைந்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சாலையை கையால் தொட்டுப் பார்த்தபோது அது கையோடு பெயர்ந்து வருவது தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளிடம் அக்கிராம மக்கள் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது தவித்து உள்ள அக்கிராம மக்கள் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்போது அமைக்கப்பட்ட சாலைக்கு பதிலாக மீண்டும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராம பொதுமக்கள் கூறுகையில்: குலமங்கலம் வடக்கு கிராமத்திலிருந்து கீரமங்கலம், பேராவூரணி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இந்த சாலை விளங்கி வருவதாகவும் கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஆனால் நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட சாலை நேற்று கையோடு பெயர்ந்து வருவது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் தங்கள் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குதிரை கோயிலில் மாசி மகத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அத்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையின் வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும் எனவும் இந்த தரமற்ற சாலையில் வாகனங்கள் பயணித்தால் ஒரே நாளில் இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து விடும் என்றும் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பணத்தை வீணடிக்காமல் தங்களுக்கு தரமான புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,நேற்று அமைத்த சாலையை இன்று கையில் எடுத்தால் பெயர்ந்து தான் வரும் என்றும், தற்போது அங்கு அமைக்கப்படும் சாலை மூன்று வருட உத்தரவாதத்தின் அடிப்படையில் தான் அமைக்கப்படுகிறது என்றும் அதனால் அந்தத் தரத்தில் தான் இருக்கு மென்றும் ஒப்பந்தத்தில் உள்ளபடி இல்லாமல் குறைந்த தடிமனில் சாலை அமைக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

Tags : Kulamangalam ,Aranthangi ,
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி