×

ஆட்டையாம்பட்டியில் குப்பை கழிவுகளுக்கு தீ வைப்பதால் புகை மண்டலமாகும் பஸ் ஸ்டாண்ட்

ஆட்டையாம்பட்டி, மார்ச் 5:  ஆட்டையாம்பட்டியில், குப்பை கழிவுகளுக்கு தீ வைப்பதால், பஸ் ஸ்டாண்டில் எழும் புகையால் பயணிகள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தினசரி சேகரமாகும் சுமார் 2 டன் குப்பை கழிவுகள், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் பகுதியில் காலி நிலத்தில் கொட்டப்பட்டு வந்தது. குப்பைகள் அதிகளவில் தேங்கியதால், தானகுட்டிப்பாளையம் அருகே மயான காலி நிலத்தில் குப்பைளை கொட்டத் தொடங்கினர். இந்நிலையில், குப்பை கழிவுகளில் கிடைக்கும் பொருட்களை சேகரிப்பதற்காக, நள்ளிரவில் குப்பை கிடங்கிற்கு வரும் மர்ம ஆசாமிகள் தீ வைத்து விட்டுச் செல்வதும், அதிகாலையில் அங்கு சென்று சாம்பலாகி கிடக்கும் கழிவுகளில் எஞ்சிய பொருட்களை எடுத்துச்சென்று விற்பனை செய்வதுமாக உள்ளனர்.

குப்பை கழிவுகளுக்கு தீ வைக்கும்போது, பிளாஸ்டிக் பொருட்களும் சேர்ந்து எரிவதால் கரும்புகை எழுந்தும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பரவுகிறது. இதனால், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகல் முழுவதும் குடியிருப்பில் விலகாத புகை மண்டலத்தால், சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்பால் மீண்டும் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கே குப்பை கிடங்கு இடம் மாறியுள்ளது. அங்கும் குப்பை கழிவுகளுக்கு தீ வைப்பது மீண்டும் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘குப்பைக்கு தீ வைத்து எரிப்பதற்கு கண்டனம் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டோம்.

இதனால், மீண்டும் குப்பை கழிவுகளை பஸ் நிலையம் பின்புறம் பகுதியில் கொட்டி வருகின்றனர். அங்கும் விஷமிகள் அடிக்கடி குப்பைக்கு தீ வைப்பதால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. எதிரில் இருப்பவர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு புகை பரவுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மூச்சு விடுவதில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பேரூராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குப்பை கழிவுகளுக்கு தீ வைப்போரை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : bus stand ,smoke zone ,playground ,
× RELATED விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர்