×

கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியில் குப்பை கிடங்காகி வரும் சரபங்கா ஆற்று படுகை

ஓமலூர், மார்ச் 6: கோட்டை மாரியம்மன் கோயில் பகுதியில் சரபங்கா ஆற்று படுகையில் இறைச்சி கழிவுகளை குவித்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேம்பாலத்திற்கு அடியில் செல்லும் சரபங்கா நதியின் கரையோரம் கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இரவோடு இரவாக கொட்டப்படும் இந்த குப்பை கழிவுகள் நீண்ட நாட்களாக அங்கேயே குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சரபங்கா நதியில் தற்போதும் நீரோட்டம் காணப்படுகிறது. ஆனால், கரையோரம் குப்பை கழிவுகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக டன் கணக்கில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட் கோட்டை மாரியம்மன் கோயில் ஊராட்சி நிர்வாகம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை என அனைத்து துறை அலுவலகத்திலும் முறையிட்டும் யாரும் வந்து எட்டிக்கூட பார்க்க வில்லை.

இதனால், சரபங்கா ஆற்றின் தோற்றமே மாறி விட்டது. தண்ணீர் நிறம் மாறி காணப்படுகிறது. அதனை பயன்படுத்த முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. கைகளில் பட்டாலே அரிப்பு ஏற்படுகிறது. எனவே, அங்குள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மறுபடியும் அந்த இடத்தில் குப்பை கழிவுகளையும் கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து முறையாக கொட்டி வைத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : garbage dump ,Sarabanka River Basin ,Fort Mariamman Temple ,
× RELATED கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா