×

அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுப்பது முறைப்படுத்தப்படுமா?

கரூர், மார்ச் 6: அமராவதி ஆற்றில் குடிநீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் இனாம்கரூர், கரூர் நகர பகுதிக்கு குடிநீர் கிணறுகள் அமைத்துள்ளன. இங்கிருந்து மோட்டார் மூலம் நீரேற்றம் செய்து மேல்நிலை தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் மட்டுமே குடிநீர் கிணறு அமைத்திருந்த நிலையில் தனியாரும் அனுமதியின்றி குடிநீர் கிணறு அமைத்து மோட்டார் மூலமாக லாரிகளில் நிரப்பி விற்பனை செய்கின்றனர். வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வந்த நிலையில் கடந்த ஆண்டு தான் மழை பெய்தது. இந்த மழையால் ஓரளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

கோடை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்ற நிலையில் தனியார் அனுமதியின்றி அமராவதி ஆற்றங்கரை பகுதிகளில் குடிநீர் கிணறுகளை அமைத்து மோட்டார் வைத்து டேங்கர் லாரிகள் மூலமாக விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில், மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு கட்டுப்பாடு விதிததன் காரணமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனினும் வழக்கமாக நீர்எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அமராவதி ஆற்றில் பாசனத்திற்காக நீர் கிடைப்பது இல்லை. கடைமடை வரை நீர் கிடைக்காததால் பாசன பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத்திற்குதான் முழுமையாக நீர் கிடைக்கவில்ல. குடிநீர் ஆதாரத்தையாவது முழுவதும் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

பொதுப்பணித்துறை அமராவதி ஆற்றுப்பாதுகாப்புக் கோட்ட அலுவலகம் கரூரில் இயங்கி வந்தது. இதனால் நீர்இருப்பு தேவை, குடிநீர் விநியோகம் போன்ற புகார்களை எளிதில் தெரிவித்து தீர்வு காண வசதியாக இருந்தது. கடந்த 7 ஆண்டுக்கு முன்னர் தாராபுரத்திற்கு இந்த அலுவலகத்தை மாற்றி விட்டனர். இதனால் உதவி பொறியாளர் அளவில் தான் கரூரில் உள்ளனர். தாராபுரத்தில் இருந்து அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்காக வந்துவிட்டுப் போய்விடுகின்றனர்.

இதனால் ஆற்றுப் பகுதியில் குடிநீர் எடுப்பதை முறைப்படுத்த முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கலெக்டர் அனுமதியற்ற தனியார் குடிநீர் கிணறுகளை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்பின்னர் இப்பிரச்னை கண்டுகொள்ளாத பிரச்னையாகி விட்டது. தனியார் குடிநீர் கிணறுகளை அனுமதியின்றி ஏற்படுத்தி குடிநீர் விற்பனை செய்கின்றனர். சாயப்பட்டறைகளுக்கும் தண்ணீரை அனுமதியின்றி கிணறு அமைத்து நீர்மூழ்கி மோட்டார் மூலமாக தண்ணீர் கொண்டுசெல்கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். குறைதீர் கூட்டத்திலும் வலியுறுத்தி வருகின்றனர். கரூர் பெரிய ஆண்டாங்கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் குடிநீர் கிணறுகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு இரவு பகலாக குடிநீர் உறிஞ்சப்படுகிறது.

கரூர் பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வரும் வேளையில் இதுதவிர ஆற்றோரம் புதிய குடியிருப்புகள், அபார்ட்மென்ட்கள் கட்ட அனுமதி வழங்கி கொண்டுள்ளனர். குடிநீர் விற்பனையை தனியார் மேற்கொண்டு, ஓட்டல்கள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கு தினமும் லாரிகளில் விற்பனை செய்யப்படுகிறது. அளவை பொறுத்து ஒருலோடு ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்கின்றனர். ரெகுலராக வாங்குபவர்களுக்கு ஒருரேட். திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அவ்வப்போதைய தேவைக்கு ஒருரேட் என விற்பனை நடைபெறுகிறது. எனவே அரசின் கட்டுப்பாட்டில் குடிநீர் விநியோகத்தை கொண்டு வர வேண்டும். குடிநீர் எடுப்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Amaravati river ,
× RELATED குடிநீர் வழங்க கோரி மறியல்