×

நெரூர் சாலை சோமூர் பிரிவில் ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து

கரூர், மார்ச் 6: கரூர் மாவட்டம் நெரூர் சாலையில் சோமூர் பிரிவு பகுதியில் மினி ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் இருந்து நெரூர், திருமுக்கூடலூர், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அரசு காலனி வழியாக ஒத்தக்கடை வரை சென்று பின்னர், கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது. கரூர் நெரூர் சாலையில் கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு சாலை பிரியும் இடத்தில் நான்கு வழிப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதே இடத்தில் புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாகனங்களின் அதிக வேகம் காரணமாக இந்த சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் சோமூர் பிரிவு அருகே மினி ரவுண்டானா அமைத்து, கூடுதலாக தெரு விளக்கு வசதி கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : vehicle accident ,
× RELATED வாகன விபத்தில் வாலிபர் பலி