×

கரூர் மாவட்டத்தில் கோடை விற்பனையை எதிர்பார்த்து தர்ப்பூசணி சாகுபடி பணி மும்முரம்

கரூர், மார்ச் 6: கோடை விற்பனையை எதிர்பார்த்து தர்பூசணி சாகுபடி நடைபெறுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க மிக குறைந்த விலையில் கிடைப்பது தர்பூசணி என்பதால் விற்பனையும் அதிகமாக இருக்கும். கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், சங்கரம்பட்டி, கூம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்பூசணிப்பழம் 70 நாட்களில் அறுவடையாகும். சொட்டுநீர் பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. முன்பு ஏக்கருக்கு 10முதல் 15டன் வரை கிடைத்தது. தற்போது 8 முதல் 9 டன் வரை தான் விளைச்சல் கிடைத்து வருகிறது. மேலும் வழக்கமாக பூசணியின் எடை 15 கிலோ இருக்கும். ஆனால் தற்போது எடையும் குறைந்து 8 கிலோ முதல் 9 கிலோ வரைதான் விளைச்சல் கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இவை தவிர வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே விற்பனை சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கின்றனர். தர்பூசணிப்பழங்களை விற்பனைக்காக கொள்முதல் செய்பவர்கள் ஒரு கிலோ ரூ.5க்குதான் கேட்கின்றனர். கூடுதல் விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் நல்ல மழை பெய்ததால் தண்ணீர் பிரச்னைக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ரூ.20 ஆயிரத்தில்இருந்து ரூ.30ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்தும் போதுமான விலை கிடைக்கவில்லை. தர்பூசணி பழங்களை விற்பனை செய்வதற்கு வேளாண்மை துறை சார்பில் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur District ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்