×

காவேரிப்பட்டணம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறி நிறுத்தப்படும் லாரிகள்

காவேரிப்பட்டணம், மார்ச் 6:  காவேரிப்பட்டணம் அருகே, திம்மாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி லாரிகளை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சர்வீஸ் சாலையில் லாரிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காவேரிப்பட்டனம் அருகே திம்மாபுரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலையான இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரி, பஸ் மற்றும் கார்கள், கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், காவேரிப்பட்டணம் வரும் வழியில் கிருஷ்ணகிரி அணை பிரிவு அடுத்த திம்மாபுரம் செல்லும் பிரிவு சாலையை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலையில் எண்ணற்ற லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், வழியில் விதிகளை மீறி லாரிகள் நிறுத்தப்பட்டு செல்வதால், வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள், பலமுறை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திம்மாபுரம் பிரிவு சாலையில், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் திம்மாபுரம் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மற்ற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கடும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விதிகளை மீறி நிறுத்தி வைக்கப்படும் லாரிகளை சர்வீஸ் ரோட்டில் நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : National Highway ,Kaveripatnam ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...