×

₹40 லட்சம் கடனுக்கு ₹4 கோடி வட்டி கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக தர்மபுரி பைனான்சியர் மீது புகார்

தர்மபுரி,  மார்ச் 6: தர்மபுரியில் ₹40 லட்சம் கடனுக்கு ₹4 கோடி வட்டியாக மட்டும் செலுத்திய  போதிலும், 500 பவுன் நகைகள், வீட்டு பத்திரம் மற்றும் வாகனத்தை பறித்துக்கொண்டு, வட்டி கேட்டு மிரட்டும் பைனான்சியர் மீது நடவடிக்கை  எடுக்கக்கோரி, ஓய்வு பெற்ற மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி,  குடும்பத்துடன் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு வழங்கியதால் பரபரப்பு  ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் தேவரசம்பட்டியை சேர்ந்தவர்  கோவிந்தன்(62). இவர் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்  பொதுமேலாளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர் நேற்று தனது மகன் திருவேங்கடமூர்த்தி, மருமகள் வழக்கறிஞர் சகிலா ஆகியோருடன் எஸ்பி  அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது  மகன் தர்மபுரி, ராசிபுரம், ஓசூர், பெங்களூரு ஆகிய 9 இடங்களில் பியூட்டி  பார்லர் நடத்தி வருகிறார். எனது மகன் தொழில் நிமித்தமாக, கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு ₹15 லட்சத்தை  தர்மபுரியில் உள்ள பைனான்சியரிடம், 100 நாட்கள் தவணை முறையில் திருப்பி செலுத்தும்  திட்டத்தில் கடனாக பெற்றுள்ளார். இந்த பணத்தை தினசரி செலுத்த முடியாத  காரணத்தால், மேலும் அவரிடமே கடன்பெற்றதால் ₹40 லட்சமாக கடன் தொகை  உயர்ந்தது. இதுவரை எனது மகன், கடனுக்கு வட்டியாக மட்டும் சுமார் ₹4 கோடி  வரை  செலுத்திவிட்டார். மேலும் வட்டிக்காக எனது மகனின் ₹3.5 லட்சம்  மதிப்புள்ள புல்லட், 500 பவுன் தங்க நகைகளை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.  தவிர வட்டிக்காக எனது பெயரில் உள்ள வீட்டின் மூலப் பத்திரத்தையும் அடமானமாக  கொடுத்துள்ளேன்.

இது தவிர எனது மகன் மற்றும் மருமகள் 20 காசோலைகளில்  கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இதன் பின்னரும் பைனான்சியர், எங்கள்  குடும்பத்தினரை பணம் கேட்டு மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை  மிரட்டல் விடுக்கிறார். எனவே எங்களிடம் மிரட்டி பறித்த 500 பவுன் தங்க  நகைகள், எங்களது வீட்டின் பத்திரம், புல்லட் மற்றும் புரோ நோட், காசோலைகளை  திரும்ப பெற்றுத்தர வேண்டும். கந்து வட்டி கொடுமையில் இருந்து எங்களது  குடும்பத்தை மீட்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : financier ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...