×

சாலை பணியை துரிதப்படுத்தக்கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி,  மார்ச் 6: நல்லம்பள்ளி அருகே கிடப்பில் போட்ட தார்சாலை பணியால் அரசு பஸ் இயக்கம்  நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பணிகளை விரைவுபடுத்தக்கோரி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட  ஆவாரங்காட்டூர் கிராமத்தில் 200 குடும்பத்திற்கு மேல்  வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கின்றனர். இந்த கிராமத்திற்கு மிட்டாரெட்டிஅள்ளி இணைப்பு  சாலையில் இருந்து, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் சாலை பழுதடைந்து  காணப்பட்டது. இதையடுத்து, தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், சாலை அமைப்பதற்கு தரமான  மண் பயன்படுத்தாமல், களிமண்ணை கொண்டு பணி  துவங்கியதாகவும், பெயரளவிற்கு ஜல்லிக்கற்கள் பெயர்க்கப்பட்ட நிலையில், பணியை  கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது. ஜல்லிக்கற்கள்  குவிக்கப்பட்டுள்ளதால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல், வாகன ஓட்டிகள்  மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தவித்து  வருகின்றனர்.

மேலும், இக்கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ், சாலைப்பணி  கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக  நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி  மாணவ, மாணவிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும்,  அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம  மக்கள், நேற்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சாலை பணியை  கிடப்பில் போட்டுள்ளதால், அரசு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி  கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் வரை  பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைக்கு செல்ல முடியாத  அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலை பணிகளை  துவங்கி தரமாக அமைக்காவிட்டால், மக்களை திரட்டி தர்மபுரி  கலெக்டர்  அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா