×

அரூர் பேரூராட்சி பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம்

அரூர், மார்ச் 6: அரூர் பேரூராட்சியில் கோடை தொடக்கத்திலேயே கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை தண்ணீர் விநியோகிப்பதால், வீடுகளை காலி செய்யும் பொதுமக்கள், ஆழ்துளை கிணறுடன் தண்ணீர் உள்ள வீடுகளுக்கு குடியேறி வருகின்றனர். தர்மபுரி  மாவட்டம் அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் திருவிக நகர்,  கோவிந்தசாமி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட ஒரு சில வார்டுகளை தவிர, மற்ற  வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், தெரு குழாய்களில் பேரூராட்சி நிர்வாகம்  வினியோகம் செய்யும் தண்ணீரை நம்பியே வசிக்கின்றனர். அரூர் நகரின் முக்கிய  நீர்வள ஆதாரமாக அரூர் பெரிய ஏரி விளங்குகிறது. பொதுப்பணித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 105 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

வடகிழக்கு  பருவமழை தர்மபுரி மாவட்டத்தில் ஓரளவு கை கொடுத்தபோதும், இந்த ஏரியில் நீரை  தேக்கி வைக்க முடியவில்லை. எனவே இந்த ஏரியை ஒட்டியுள்ள அரூர் நகரின் பல  பகுதிகளில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம்  தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக முருகன் கோயில் தெரு, அம்பேத்கர் காலனி,  பழைய பேட்டை ஆகிய பகுதிகளில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர்  வினியோகம் செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் குடிநீருக்காக  பயன்படுத்தும் ஒகேனக்கல் குடிநீரும், வாரத்திற்கு ஒருமுறை ஒரு மணி நேரம்  மட்டுமே வினியோகம் செய்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு  சிரமப்பட்டு வருகுின்றனர். கடைகளில் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி  வருகின்றனர். இதனால் பேரூராட்சியில் தண்ணீர் தட்டுபாடு உள்ள பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்கள், தங்களின் வீடுகளை காலிசெய்துவிட்டு, ஆழ்துளை  கிணறுடன் தண்ணீர் வசதியுள்ள வீடுகளுக்கு, அதிக வாடகை கொடுத்து குடியேறும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் பிரச்னையை தீர்வுகாண  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Aroor ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை