×

பண்ணைப்புரம் கிராம பகுதிகளில் மழை வளம் தரும் மரங்களை நட வேண்டும்

தேவாரம், மார்ச் 6: பண்ணைப்புரம் கிராம பகுதிகளில் அதிகளவில் மழைவளம் தரும் மரங்களை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பண்ணைப்புரம் இயற்கையிலேயே மழை அதிகம் கிடைக்காத லொகேசனில் உள்ளது. இதனால் நாளுக்குநாள் வறட்சியின் பிடியில் சிக்கி வருகிறது. குறிப்பாக பண்ணைப்புரம் பகுதிகளைச் சுற்றிலும் உள்ள கண்மாய்கள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி வருகிறது. மழை இல்லாவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும் சோகத்தை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்டாக்கி வருகிறது. இதனால் பொருளாதார பாதிப்புகள் என்பது அனைத்து தரப்பு மக்களையும் செல்கிறது. இயற்கைவளம் பாதுகாக்கப்பட பண்ணைப்புரம் கிராமப்புற பகுதிகளில் அதிகமான அளவில் மழை பெற்றுதரக்கூடிய மரங்களை நடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு எடுக்க வேண்டும்.

குறிப்பாக ஆல், வேம்பு, புங்கன், அரசு மரங்கள் போன்றவற்றை மாநில நெடுஞ்சாலைத்துறை, கண்மாய்கள், பொது இடங்கள், தோட்டங்கள், மலையடிவாரத்தை ஒட்டி உள்ள இடங்களில் மரங்களை நடுவதுடன், அதனை பராமரிக்க ஏதாவது தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தலாம். இதற்கான ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகம் கூட்டக்கூடிய கூட்டங்களில் வழங்க வேண்டும். மரங்கள் அதிகமானால்தான் எதிர்காலத்தில் மழை அதிகம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இதனை கருத்தில் கொண்டு தேவையான முயற்சிகளில் இறங்கிட வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பண்ணைப்புரம் மற்றும் இதனை சுற்றிலும் உள்ள மேலசிந்தலைசேரி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மழை இல்லாவிட்டால் வறட்சியின் உச்சத்தில் செல்கிறது. மழை இல்லாவிட்டால் தண்ணீரே இல்லை என்ற நிலை உண்டாகி வருகிறது. எனவே உடனடியாக அதிகளவில் மரங்களை நடவேண்டும். பயன்தரக்கூடிய மரங்களை நட்டால்தான் எதிர்காலம் பாதுகாக்கப்படும்’ என்றனர்.

Tags : farmland ,
× RELATED கொள்ளிடத்தில் தொடர்ந்து...