×

காளையார்கோவிலில் காய்கறி வியாபாரம் செய்யும் கைதிகள் இயற்கை விவசாயம் என்பதால் நல்ல வரவேற்பு

காளையார்கோவில், மார்ச் 6:  காளையார்கோவில் திறந்தவெளி சிறை சாலையோரம் கைதிகள் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புரசடிஉடைப்பு கிராமத்தில் சுமார் 87 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறைச்சாலை உள்ளது. இங்கு தற்போது 48 கைதிகள் உள்ளனர். இவர்கள் குற்றத்திற்கு தகுந்தாற்போல் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் நன்னடத்தை கருத்தில் கொண்டு தண்டனை காலங்களில் கைதிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இங்கு கடலை, வாழை, மா, தென்னை, வெண்டைக்காய், தக்காளி, கத்திரி, முள்ளங்கி, முந்திரி உள்ளிட்டவை விவசாயம் செய்கின்றனர்.

இவற்றி–்ல் விளையும் காய்கள், பழங்களை திறந்தவெளி சிறைச்சாலை முன்பு ரோட்டோரம் கூடாரம் அமைத்து தினமும் காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை விற்பனை செய்து வருகின்றனர். இயற்கை முறையில் காய்க்கும் காய்கறி, பழங்கள் என்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு வியாபாரிகளாக நன்னடத்தை கைதிகள் இருவருடன் ஒரு காவலரை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதத்தை கைதிகளுக்கு தண்டனை காலம் முடித்து வெளியில் செல்லும் போது வழங்கப்படுகிறது. இத்திட்டம்  மதுரை மத்திய சிறை டிஐஜி பழனி, எஸ்பி ஊர்மிளா வழிகாட்டுதல்படி காளையார்கோவில்  திறந்தவெளி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆதிராஜன் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்