×

குப்பைக்கு தீ வைப்பு டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது

பண்ருட்டி, மார்ச் 6: கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு வைத்த தீ காற்றின் வேகத்தில் பரவி டிரான்ஸ்பார்மர் பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் உரிய நேரத்தில் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான இடம் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சியினர் கடந்த சில மாதங்களாக குப்பைகளை தரம் பிரிக்கப்படாமல் கொட்டி வருகிறார்கள். மேலும் அவ்வப்போது இந்த குப்பைகளை இதே இடத்தில் நகராட்சியினர் தீ வைத்து கொளுத்தி வருகிறார்கள். இதனால் கடந்த சில தினங்களாக குப்பைகள் எரிந்து கொண்டு இருக்கிறது. மேலும் இந்த இடத்தில் மின்மாற்றி உள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று மாலை குப்பைகள் எரிந்து கொண்டு இருந்தபோது மின் மாற்றியில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் பாக்ஸ் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது, இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் தீயணைப்பு படையினர்  சென்று தீயை அணைத்தனர். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த இடத்தில் கருமகாரிய கொட்டகை, குடிநீர் போர்வெல், சலவை தொழிலாளர்கள் துணி துவைத்தல் போன்றவை நடக்கிறது. மேலும் இதன் அருகில் குடியிருப்பு பகுதி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு வாணிப கழகம் ஆகியவை உள்ளன.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நகராட்சியினர் குப்பைகளை கொட்டி எரித்து வருகிறார்கள். எரியும் குப்பையால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் மின்மாற்றியை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படாததால் குப்பைகள் எரிந்து மின் மாற்றியில் பரவி தீ பிடித்தது. உரிய நேரத்தில் தீயணைப்பு வாகனம் வந்ததால் பெரும் விபத்து நடைபெறாமல் தப்பியது என்றனர்.

Tags : garbage transformer transformer ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி