×

கோடை துவக்கத்திலே வறட்சி சிக்கலில் குடிநீர் திட்டங்கள்

சிவகங்கை, மார்ச். 6: கோடை தொடக்கத்திலேயே வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வைகை, காவிரி உள்ளிட்ட மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டங்களும், நாட்டாறு, சருகணியாறு மற்றும் கண்மாய்களில் ஆழ்குழாய் அமைத்து அதன்மூலமும் ஏராளமான ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திருச்சி அருகே முத்தரசநல்லூர் பகுதியில் இருந்து பல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மற்ற திட்டங்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டத்திற்குள் உள்ள பகுதிகளில் தொடங்கப்பட்ட திட்டங்களாகும். வைகையாற்றில் உள்ள குடிநீர் திட்டம் சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120 குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

ஆற்றில் இருந்த நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் மணல் அள்ளப்பட்டதால் குறைந்துவிட்டது. தற்போது ஆற்றுக்குள் சுமார் 350 அடி ஆழத்திற்கும் அதிகமாக போர் போட்டால்தான் நீர் கிடைக்கிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்கென ஆண்டுதோறும் வைகையில் நீர் திறப்பது கிடையாது. சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வைகை பகுதியில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு பல மாவட்டங்களுக்கு நீர் எடுக்கப்படும் நிலையில் இம்மாவட்டத்திற்கென குடிநீருக்கான பங்கு நீர் திறக்கப்படாததால் அதிகப்படியான நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் எடுக்கப்படும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இதுபோல் நாட்டாறு, சருகணியாறு மற்றும் கண்மாய் பகுதிகளில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை தொடக்கத்திலேயே கடுமையான வெப்பம் நிலவுவதாலும், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை இல்லாமல் உள்ளதாலும் கடுமையான வறட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குடிநீர் திட்டங்கள் மூலம் பெறப்படும் நீரின் அளவு குறைந்து வருகிறது. நீர் பற்றாக்குறையால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களின் இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும் குளங்கள் வற்றிவிட்டதால், குளங்கள் மூலம் கிடைத்து வந்த நீர் நின்று போனது. தொடர்ந்து வறட்சி நிலவினால் தற்போது நீர் கிடைத்து வரும் குடிநீர் திட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘கையால் பள்ளம் தோண்டினாலே நீர் கிடைக்கக்கூடிய வைகையில் தற்போது 350 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்து நீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆற்றில் உள்ள மணலை அள்ளியதால் தான் இந்த நிலை. சிவகங்கை மாவட்ட வைகையாற்று பகுதியில் அதிகமான குடிநீர் திட்டங்கள் உள்ளன. ஆனால் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கென தனியாக நீர் திறப்பதில்லை. மாவட்டத்தில் உள்ள பிற ஆறுகளிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குடிநீர் திட்டங்கள் மூலம் தான் தற்போது மாவட்டத்தில் குடிநீர் வழங்க முடிகிறது. இதில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே நீராதாரங்கள், நீர்வழித்தடங்களை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை