×

கொரோனா வைரஸ் பாதிப்பு அவசர உதவி எண் அறிமுகம்

திருப்பூர், மார்ச். 6: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவசர உதவிக்கு 24 மணி நேர உதவி எண் ஒன்றினை நேற்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசுகையில்,கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு, சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல், ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமி ஆகும். சீனாவின் வூகான் நகரத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இது குறித்து, அச்சம் கொள்ள தேவையில்லை.

மேலும், தொடர்ந்து, காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தியோ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. இதைத் தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். இருமல், தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும்.
சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். அதே போல் சுற்றுலா மேற்கொள்ளும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம்.

இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்குபெறுவதையும் தவிர்க்க வேண்டும். சமீபத்தில், சீனாவிற்கு பயனம் சென்று வந்தவர்கள் இருமல், சளி, காய்ச்சல் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கைகழுவும் கிருமி நாசினி போதிய அளவு வைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளிடம் தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு கைகளை நன்கு  கழுவதற்கு எடுத்துரைத்து, கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவசர உதவிக்கு 24 மணி நேர உதவி எண் :011-23978046, 94443-40496, 87544-48477 எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், உதவி இயக்குநர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Introduction ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...